×

மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அதிநவீன வசதியுடன் ஆபரேஷன் சென்டர் தொடங்கப்படும்: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைவில் அதிநவீன வசதியுடன் கூடிய ஆபரேஷன் சென்டர் தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி கூறினார்.
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி நேற்று திடீர் ஆய்வு செய்தார். அவருடன் தேசிய சுகாதார திட்ட இயக்குனர் ஷில்பா பிரபாகரன், தமிழ்நாடு சுகாதார மேலாண்மை இயக்குனர் கோவிந்தராஜ், மாநில ஊரக நலப் பணிகள் இயக்குனர் சண்முககனி உடன் சென்றனர்.

அப்போது மருத்துவமனையில் உள்ள ஆண்கள் சிகிச்சை பிரிவு, பெண்கள் சிகிச்சை பிரிவு, ஆண்கள், பெண்கள் கழிவறைகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு என அனைத்து அறைகளையும் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். வார்டு நோயாளிகளிடம், மருத்துவமனையில் போதிய வசதிகள் உள்ளதா, சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். பின்னர் மருத்துவமனையில் உள்ள ஆண்கள் கழிவறை மற்றும் பெண்கள் கழிவறையை சுகாதாரமின்றி காணப்பட்டதை கண்டு கழிவறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு கண்டிப்புடன் உத்தரவிட்டார். மேலும், நோயாளிகளுக்கு சரியாக தலையணை வழங்கப்படாதது குறித்து வருத்தம் தெரிவித்த அவர், சுத்தமான தலையணை மற்றும் பெட்ஷீட் வழங்கவும் மருத்துவமனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ககன்தீப்சிங் பேடி கூறியதாவது: தமிழ்நாடு அரசின் சார்பில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து வருகிறேன். இதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டதில் மருத்துவமனை 850 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. விரைவில் மருத்துவமனையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆபரேஷன் சென்டர் தொடங்கப்படும்.
மருத்துவர்களுக்கான கலந்தாய்வு சமீபத்தில் நடந்தது. இதன் அடிப்படையில் மருத்துவர்கள் இந்த மாதத்திற்குள்ளாக நியமிக்கப்பட்டு மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நிரப்பப்பட உள்ளனர்.

பிரைமரி மருத்துவமனைகளில் புதிதாக டாக்டர்கள் மெடிக்கல் போர்டு மூலமாக நியமிக்கப்பட உள்ளனர். செவிலியர்களின் பற்றாக்குறையை அரசு படிப்படியாக குறைக்க வழிவகை செய்துள்ளது. அடுத்த 4 மாதத்திற்குள் மருத்துவமனையில் செவிலியர்கள் நிரப்பப்பட்டு பற்றாக்குறை நீக்கப்படும். தமிழ்நாடு மருத்துவத் துறையில் சிறந்து விளங்குகிறது. மாவட்ட மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் ஒத்துழைப்பின் காரணமாக சிகிச்சை மேம்பட வாய்ப்புள்ளது.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உபகரணங்கள் குறைவாகத்தான் உள்ளது, புதிதாக உபகரணங்கள் கொடுப்பதற்கு அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒன்றிலிருந்து இரண்டு வருடங்களில் மருத்துவமனைகளில் கூடுதல் உபகரணங்கள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ரூ.500 கோடியில் உபகரணங்கள் வாங்க அரசு சார்பில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மருத்துவமனைகளில் தேவையான உபகரணங்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு மற்றும் உலக வங்கியின் நிதி கேட்டு பெறப்பட்டு உபகரணங்கள் விரைவில் வாங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

மருத்துவமனையில் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் பெட்ஷீட் சுத்தமாகவும் உணவு வகைகள் சுத்தமாக கொடுக்கப்படுவதுடன் குளியலறை மற்றும் கழிவறை ஆகியவற்றை சுத்தமாக பராமரிக்க வேண்டும். மருத்துவமனைகளில் சுத்தத்தை சரியாக பராமரிக்காத ஒப்பந்த நிறுவனம் மாற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது தேசிய சுகாதார திட்ட இயக்குனர் ஷில்பா பிரபாகரன், தமிழ்நாடு ஹெல்த் ஸ்கீம் ப்ராஜெக்ட் திட்ட இயக்குனர் கோவிந்தராவ், மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை இயக்குனர் சண்முக கனி, கூடுதல் இயக்குனர் சோமசுந்தரம், இணை இயக்குனர்கள் நிர்மல்சன், ஜெமினி, மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் பி.சேகர், சுகாதாரத் துறை துணை இயக்குனர்கள் கே.ஆர்.ஜவஹர்லால், எம்.செந்தில்குமார், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, துணை முதல்வர் திலகவதி, ஆர்எம்ஓ ராஜ்குமார், ஏஆர்எம்ஓ பிரபுசங்கர் மற்றும் டாக்டர்கள் ஜெகதீஷ், விஜயராஜ், மருத்துவமனை நிர்வாக அலுவலர் சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

* தினமும் 400 பேர் டெங்குவால் பாதிப்பு
மழையின் காரணமாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெங்குவின் தாக்கம் அதிகமாக இருக்கும். உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் ஆகிய மூவரும் இணைந்து செயல்பட்டால் டெங்குவை தடுக்க முடியும். தமிழகம் முழுவதும் நாள்தோறும் 300 முதல் 400 பேர் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அழுத்தத்தில் பணிபுரிகின்றனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.

The post மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அதிநவீன வசதியுடன் ஆபரேஷன் சென்டர் தொடங்கப்படும்: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தகவல் appeared first on Dinakaran.

Tags : District Government Medical College Hospital ,Public Welfare Secretary ,Gagandeepsingh Bedi ,Thiruvallur ,
× RELATED அரசு மருத்துவமனை வளாகத்தின் தடுப்பு...